திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 80 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
ஆந்திர மாநிலத்திலிருந்து திருத்தணி வழியாக கஞ்சா கடத்தி வருவதாக திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமராஜ் தலைமையிலான போலீசார் திருத்தணி அருகே உள்ள பொன்பாடி சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக மூட்டையுடன் நடந்து வந்த 2 வாலிபர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் கொண்டுவந்த கோணிப்பையில் சுமார் 80 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் திருத்தணி அடுத்த அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த சதீஷ், தானப்பன் என்கின்ற பிரபு என்பது தெரிந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.