மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய மூன்று பேரை கைது செய்த போலீசார்
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள கனகம்மாசத்திரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் கனகம்மாசத்திரம் போலீசார், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த பல்வேறு வாகனங்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது சந்தேகக்கிடமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி சோதனை செய்ததில், கனகம்மாசத்திரத்தை சேர்ந்த அருண்(23), சுனில் குமார்(20) மற்றும் சஞ்சய்(20) ஆகிய மூன்று பேர் கஞ்சா கடத்தி வருவது தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 500 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.