பள்ளிப்பட்டு அருகே முதல் முறையாக கிராமத்திற்கு போக்குவரத்து சேவை தொடக்கம்
பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிராமத்திற்கு முதல் முறையாக போக்குவரத்து சேவையை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வெங்கல்ராஜ்குப்பம், திருமல்ராஜ்பேட்டை, படுதளம், அருந்ததி காலனி, சுற்றுவட்டார கிராமங்களுக்கு போக்குவரத்து வசதிக்காக கிராம மக்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.
சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பிரதான சாலைக்கு பயணிக்க வேண்டிய நிலையில் பள்ளி கல்லூரி மாணவர்கள், பெண்கள், முதியோர் உட்பட கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.சந்திரன் கிராம மக்களுக்கு உறுதி கூறினார்.
அதன்படி, வெங்கல்ராஜ்குப்பம் முதல் திருத்தணிக்கு அரசு பேருந்து சேவையை எம்.எல்.ஏ சந்திரன் தொடங்கி வைத்தார். முதல் முறையாக கிராமத்திற்கு போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளதால், கிராம மக்கள் ஒட்டு மொத்தமாக திரண்டு வந்து பேருந்துக்கு பூஜை செய்து மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
இதனையடுத்து வெங்கட்ராஜ்குப்பத்திலிருந்து தனது முதல் பயணத்தை தொடங்கிய அரசு பேருந்தில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட திமுக பொறுப்பாளர் உட்பட கிராம மக்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சியோடு அரசு பேருந்தில் அமர்ந்து பயணத்தை தொடங்கினர்.
பல ஆண்டுகள் காத்திருப்பு நிறைவேற்றி வைத்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக அரசுக்கு கிராம மக்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.