திருத்தணி அருகே பள்ளி பூட்டுகளில் மனிதக் கழிவுகள் பூசிய மர்ம நபர்கள்
திருத்தணி அருகே பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனித கழிவு பூசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிஆர்ப்பாட்டம் நடந்தது.;
திருத்தணி அருகே அரசு பள்ளி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை பூட்டுகளில் மனித கழிவுகளை பூசிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம் மத்தூர் ஊராட்சியில் 6-வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில், சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளி செயல்பட்டு பின்னர் மாலை பூட்டி சென்று இன்று காலை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வந்தபோது பள்ளி கேட் பூட்டப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிக்கு உள்ளே உள்ள வகுப்பறை கட்டடத்தில் உள்ள பூட்டுகளில் மனித கழிவுகள் மனித மலம் பூசப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள், பள்ளியின் முன்பு சமையல் செய்யும் கூடம் மைதானத்தில் அமர்ந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
இவர்களுக்கு ஆதரவாக மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பள்ளியின் முன்பு அமர்ந்து பள்ளியில் மனித கழிவுகளை பூசி ஜாதி பிரச்சனை ஏற்படுத்தும் நபர்கள், பள்ளியில் வகுப்பறை கட்டடங்களை உடைத்து, தண்ணீர் தொட்டிகளை உடைத்து, வகுப்பறைகளில் மதுபானம் அமர்ந்து குடிக்கும் நபர்கள், இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடமும் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடமும் தெரிவித்துள்ளோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே இனியாவது உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் இந்த பள்ளியில் மனித கழிவுகளை பூசி ஜாதி பிரச்சனைகளை ஏற்படுத்தும் நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர். இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் பள்ளியில் வகுப்பறை பூட்டுகளில் மனித மலத்தை பூசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளியின் பெற்றோர், ஆசிரியர் சங்கத்தின் மூலம் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த ஊராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.