மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் நாசர் பங்கேற்பு

திருத்தணி அருகே மே தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் நாசர் பங்கேற்றார்.

Update: 2023-05-02 09:54 GMT
திருத்தணி அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் நாசர் பங்கேற்றார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றியம், கோரமங்கலம் ஊராட்சி மந்தைவெளி மைதானத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா‌.மு.நாசர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்ஆல்பி ஜான் வர்கீஸ், முன்னிலையில் பொதுமக்களோடு கலந்துரையாடி, குறைகளை கேட்டறிந்து கருத்துக்களை வழங்கினார்கள்.

பால்வளத்துறை அமைச்சர்  தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, ஏற்கனவே வருடத்திற்கு நடைபெற்ற நான்கு கிராம சபை கூட்டத்தை அதிகரித்து தமிழகத்தில் ஆறு கிராம சபை கூட்டமாக நடத்த ஆணையிடப்பட்டு;ள்ளது. இதன் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஆறு கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. எனவே, கிராமமக்களின் நலன் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். எனவே, உங்களுடைய குறைகளை, உங்களுடைய தேவைகளை இந்த கூட்டத்தில் தெரிவிக்கலாம்.

இந்தியாவில மொத்தம் 6,49,481 கிராமங்கள் உள்ளது. அதில் நம் தமிழ்நாட்டில் 15,949 கிராமங்கள் உள்ளது. ஏறக்குறைய 2,75,00,000 மக்கள் கிராமத்தில் தான் வாழ்கின்றார்கள். உங்களுடைய தேவைகளை ஆய்ந்தறிந்து, உங்களுடைய குறைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்ற தான் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர்கள் என ஆகியோர்கள் முன்பு பதிவு செய்து, மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ என்பதற்காக தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கட்டாயமாக இந்த கிராம சபை கூட்டம் வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் இந்த கிராம சபை கூட்டத்தை கூட்டியிருக்கிறோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த முறை பெண்கள் தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக திருத்தணியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2800 கோடி மதிப்பீட்டில் சுழல் நிதி கடன்களை வழங்கியுள்ளார். இந்த முறை இரண்டு மாதத்திற்கு முன்பு திருச்சியில் ரூ.2400 கோடி மதிப்பீட்டில் சுழல் நிதி கடன்களை வழங்கியுள்ளார்கள். பெண்கள் தஙகளுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தி முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான்  தமிழ்நாடு முதலமைச்சர் இதுபோன்ற நலத்திட்டங்களையெல்லாம் வழங்கி வருகிறார். இந்த கிராம சபை கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இக்கிராம சபை கூட்டத்தில் திருத்தணி ஊராட்சி ஒன்றியம், கோரமங்கலம் ஊராட்சி மந்தைவெளி மைதானத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பாக அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, கிராமப்புறத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணி காத்திடும் வகையில் "எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம்" என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர்கள முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கோரமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நரசிம்மராஜு தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில், முதலில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையினை கிராம சபையின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் கிராம வளர்ச்சி திட்டம் குறித்தும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்தும் பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் குறித்தும் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு குறித்தும் பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் குறித்தும் தூய்மை பாரத இயக்கத்தில் கழிப்பறை கட்டி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பாராட்டு தெரிவித்தும் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நிலையை தக்க வைத்தல் குறித்தும் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்தும் நெகிழிக்கு மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் குறித்தும் நெகிழி கழிவு மேலாண்மை குறித்தும் திரவ கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்தும் ஜல்ஜீவன் இயக்கம் குறித்தும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்தும் வறுமை குறைப்பு திட்டம் குறித்தும் நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட 13 அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அதில் முழுமையடைந்து தன்னிறைவு பெற ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, திருத்தணி நகராட்சி, ம.பொ.சி. சாலையில் உள்ள திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தை அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்து, மாவட்ட ஆட்சித் அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டனர்.

இக்கிராம சபை கூட்டத்தில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஃ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேஷன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மலர்விழி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) ஜவஹர்லால், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் (பொ) ஜெயராஜ் பௌலின், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரூபேஷ், கோரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் நரசிம்மராஜு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News