இளைஞரைத் தாக்கிக் பணம் பறித்து சென்ற 4 கஞ்சா ஆசாமிகள்.

கஞ்சா போதையில் வந்த 4 இளைஞர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபரை தாக்கி பணம் பறித்துக் கொண்டு தப்பி ஓட்டம்

Update: 2021-04-18 12:00 GMT

தமிழக ஆந்திர எல்லையோர பகுதியான திருத்தணி அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் கஞ்சா போதையில் வந்த 4 இளைஞர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபரை தாக்கி பணம் பறித்துக் கொண்டு தப்பி ஓட்டம்; கஞ்சா ஆசாமிகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தமிழக ஆந்திர எல்லையோர பகுதிகளில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்யப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த பகுதிக்கு சென்று கஞ்சா வாங்கி பயன்படுத்தி வருவதும் அதிகரித்துள்ளது. அதேபோல் போதை தலைக்கேறிய நிலையில் கொலை, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

திருத்தணி அடுத்த பூனிமாங்காடு, நல்லாட்டூர் ஆகிய பகுதிகளில் சமீபகாலமாக கஞ்சா போதையர்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் சென்று வர மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் திருத்தணி அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த ஹேமச்சந்திரன் (23) என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் அரிசி வாங்கி கொண்டு சென்று கொண்டிருந்தபோது, எதிரில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதுடன் அந்த இளைஞரை கத்தியால் தாக்கி குத்தியுள்ளனர்.

இதில் அந்த இளைஞருக்கு வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு கஞ்சா கும்பல் ஓட்டம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். எனவே கஞ்சா ஆசாமிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் ஆந்திர எல்லையோர பகுதிகளில் அமைந்துள்ள தமிழக கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து கழக மாற்றத்திடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News