குடிபோதையில் மனைவியை குத்திக் கொலை செய்த கணவன் கைது: போலீசார் விசாரணை

ஆர்.கே.பேட்டை அருகே குடிபோதையில் மனைவியை குத்திக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-12-29 03:15 GMT

கைது செய்யப்பட்ட தமிழ்மணி.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை அடுத்த பாலாபுரம் ஆர்‌ஜே.கண்டிகை சேர்ந்த கட்டிட தொழிலாளி தமிழ்மணி(42) அவரது மனைவி மங்களா(37) தம்பதிக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு சரவணன்(14),பிரவீன்(12) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தமிழ்மணிக்கு குடி பழக்கம் இருப்பதாக கூறப்படுகின்றது.

இதனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து அய்யனேரி சாம்ராஜ் கண்டிகையில் அவரது பெற்றோர் வீட்டில் மூத்த மகனுடன் மங்களா வசித்து வந்தார். இளைய மகன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார். அய்யனேரியில் டெய்லர் கடை நடத்தி வரும் மங்களாவிடம் குடும்பம் நடத்த வரக்கோரி அவரது கணவர் அடிக்கடி தகராறு செய்வதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று காலை டெய்லர் கடைக்கு சென்றபோது, அங்கு குடிபோதையில் காத்திருந்த தமிழ்மணி கையில் வைத்திருந்த கத்தியால் மங்களாவை ஆவேசமாக சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மங்களாவை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் சக்திவேல் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து கொலை சம்பவத்தில் தடயங்கள் சேகரித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான தமிழ் மணியை மடக்கிப்பிடித்துதீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் ஆர்கே பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

Tags:    

Similar News