திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு வழங்கும் முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர்
திருத்தணியில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.;
திருத்தணி எம்.ஆர் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கோட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவை வழங்கும் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் தங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை ஆகியவை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று திருவள்ளூர் கோட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் அமைத்து அதன் மூலம் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
இதைதொடர்ந்து அவர் கூறும்போது மாவட்டத்தில் நமது கணக்கெடுப்பில் இதுவரை 258 திருநங்கைகள் இருந்தார்கள், தற்போது கூடுதலாக 138 பேர் சேர்க்கப்பட்டுள்னர். மேலும் திருநங்கைகளுக்கு கோட்டம் வாரியாக சிறப்பு முகாம் அமைத்து அடையாள அட்டைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி நேற்று திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய கோட்டங்களில் சிறப்பு முகாம் அமைத்து அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன என்றார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார், சமூகநலத்துறை அலுவலர் ராஜ ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.