ஏ.டி.எம். மையங்களில் உதவி செய்வது போல் நடித்து பணம் மோசடி செய்தவர் கைது
திருத்தணி பகுதியில் ஏ.டி.எம். மையங்களில் உதவி செய்வது போல் நடித்து பணம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;
கைது செய்யப்பட்ட ஏழுமலை
திருத்தணியில் ஏ.டி.எம் மையங்களுக்கு வரும் முதியோருக்கு உதவி செய்வது போல் நடித்து நூதன முறையில் பணம் மோசடி செய்து 20க்கும் மேற்ப்பட்ட போலி ஏ.டி.எம் கார்டுகள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஏ.டி.எம். மையங்களில் முதியோருக்கு உதவி செய்வது போல் நடித்து பணம் மோசடியில் ஈடுபட்டு வந்த சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வந்தது. இந் நிலையில் திருத்தணி எஸ்.பி.ஐ வங்கி கிளை வளாகத்தில் உள்ள ஏ.டி.எம்.மையத்தில் வெகுநேரம் முகக்கவசம் அணிந்து கொண்டு வாலிபர் ஒருவர் நின்றிருந்ததை சி.சி.டி.வி. காட்சியில் பார்த்த வங்கி கிளை மேலாளர் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வங்கிக்கு விரைந்து வந்து அங்கு நின்று கொண்டிருந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், அவரிடம் 20க்கு மேற்பட்ட போலியான ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்ததும், ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க வரும் முதியோருக்கு உதவி செய்வது போல் நடித்து அவர்களின் ஏ.டி.எம் கார்டு பின் நெம்பர் தெரிந்து கொண்டு திசை திருப்பி கார்டு மாற்றிக் கொடுத்து விட்டு அவர்கள் சென்ற பின் அவர்களது ஏ.டி.எம். கார்டிலிருந்து பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து முதியோரிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை(27) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பாட்டார்.