திருத்தணியில் ஆந்திர மதுபானங்கள் விற்பனை படுஜோர்! கண்டுகொள்ளாத காவல்துறை!!
திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆந்திரா மது விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இதனை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.;
தமிழகத்தில் தொற்று பரவல் அதிகமானதால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்தது. இதனையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் தமிழக, ஆந்திர எல்லையோர பகுதிகளில் மது விற்பனை படுஜோராக நடக்கிறது.
ஆந்திராவில் 12 மணி வரை மது விற்பனை செய்யலாம் என்ற அறிவிப்பால் திருவள்ளூர் மற்றும் திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் நகரி, கனகம்மாசத்திரம் ஆகிய பகுதிகளில் ஆந்திர மதுபானங்களை அதிக அளவில் மூட்டை மூட்டையாகவும், பெட்டி பெட்டியாகவும் வாங்கி வந்து திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் திருத்தணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் சென்னைக்கும் அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.
ஆனால் இதனை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை. எனவே திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் சோதனை சாவடி அமைத்து மதுபானங்களை அதிக அளவில் வாங்கி அதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் தொற்று பரவும் அபாயம் அதிகளவில் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.