திருத்தணி அருகே நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை கொலை செய்த கணவன்
திருத்தணி அருகே நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.;
கொலை செய்யப்பட்ட புவனேஸ்வரி
திருத்தணி அருகே மனைவியின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கிருஷ்ணசமுத்திரம் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). அவருக்கு சிங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த புவனேஷ்வரி (வயது 23) என்பவருடன் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதியினருக்கு 3வயதில் நகுலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. சென்டிரிங் வேலை செய்து வரும் சுரேஷ் தினமும் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சம்பவத்தன்று மது அருந்தி விட்டு வீட்டிற்கு சென்று புவனேஸ்வரியிடம் தன் தாய் வீட்டுக்கு சென்று ரூ. 50 ஆயிரம் பணம் வாங்கி வர வேண்டும் என்று கேட்டும் மனைவியின் நடத்தையில் சந்தேகித்தும், போதையில் தகராறு செய்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இரவு வீட்டில் புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை ராஜாவுக்கு சுரேஷ் போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து திருத்தணி போலீசாருக்கும் தன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் அளித்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புவனேஸ்வரியின் தந்தை ராஜா அளித்த புகாரின் பேரில் உதவி காவல் ஆய்வாளர் ராக்கிகுமாரி வழக்கு பதிவு செய்து சுரேஷிடம் தீவிர விசாரணை நடத்தியதில் மனைவி நடத்தையில் சந்தேகம் இருந்ததால், உருட்டு கட்டையில் அடித்தும், கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக நம்பவைக்க முயற்சி செய்ததாக வாக்கு மூலத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து சுரேசை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..