அடகு கடையில் போலி தங்க நகை வைத்து மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கைது
திருத்தணி அருகே நகை அடகு கடையில் போலி நகை வைத்து மூன்று லட்சம் பணம் மோசடி செய்த 6.பேரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி கனகம்மாசத்திரம் நகை அடகு கடையில் 8.சவரன் போலி தங்க நகையை வைத்து 3.லட்சம் ஏமாற்றிய 3 பெண்கள் உள்பட 6-பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா கனகம்மா சத்திரம் பஜார் பகுதியில் நகை கடை நடத்தி வருபவர் ரேகா. இவர் ஆர்.ஆர். ஜுவல்லரி என்ற பெயரில் புதிய நகை விற்பனை மற்றும் நகைகள் அடமானம் வைத்து பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவரது கடைக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அருகிலுள்ள ஆந்திர மாநிலம் விஜயபுரம் பகுதியை சேர்ந்த லதா என்ற பெண் நகையை வைத்து பணம் வாங்க வந்திருக்கிறார். இதில் இரண்டு முறையாக 8 சவரன் நகையை வைத்து 2.லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
இவர் சென்றவுடன் அந்த நகைகளை பரிசோதனை செய்து பார்த்த அடகு கடை உரிமையாளர் ரேகா பாதி தங்கம் பாதி போலியான நகை என்பதை தெரிந்து கொண்டு உடனடியாக அருகிலுள்ள கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மாலாவிடம் புகார் தெரிவித்துள்ளார்.
புகாரை பதிவு செய்து கொண்ட போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த போலி நகையை அடமானம் வைத்த லதாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த மோசடியில் இவருக்கு உடந்தையாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மற்றும் கனகம்மாசத்திரம் பகுதியை சேர்ந்த லோகன், ராம மஞ்சுளு, சந்திரசேகர்,ரேகா, ஹரிதா ஆகியோர் கூட்டு சேர்ந்து ஆந்திர மாநிலம் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலியான நகைகளை டெல்லியில் இருந்து பாதி தங்கம் கலந்த நகைகளை வாங்கி வந்து வங்கிகள் மற்றும் நகை அடமானக் கடைகளில் வைத்து பணம் பெற்றது தெரியவந்தது.
இவர்கள் இதுவரை பல்வேறு அடமான நகை கடைகளில் இது போல் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இந்த ஆறு பேரையும் கனகம்மாசத்திரம் போலீசார் கைது செய்து போலியான தங்க நகை 8 சவரனையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பெண்கள் மூன்று ஆண்கள் இவர்கள் அனைவரையும் திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவரிடம் மருத்துவ சான்றிதழ் பெற்று திருத்தணி நீதிபதி முன்பு ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் இவர்கள் 6 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.