திருத்தணியில் 1008 பால்குட ஊர்வலம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2024-04-14 17:30 GMT

 திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அபிஷேக விழா நடந்தது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம் மற்றும் பால்குட அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர்

ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக திகழும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை 1, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காலை 9 மணிக்கு 1008 பால்குட ஊர்வலம், அபிஷேக விழா நடைபெற்றது.

விழாவையொட்டி திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெரு, நந்தியாற்றங்கரையில் உள்ள கோட்டா ஆறுமுகசாமி கோயிலில் இருந்து 1008 பால்குடங்களுக்கு மஞ்சள் பூசி, வாழை இலை வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் 1008 பால்குட ஊர்வலத்தை கோயிலில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ஊர்வலம், பெரிய தெரு, கீழ்பஜார், ஜோதிசுவாமி கோயில் தெரு, கந்தசாமி தெரு, ம.பொ.சி சாலை, சரவணப்பொய்கை வழியாக திருத்தணி மலைக் கோயிலை வந்தடைந்தது.


பின்னர் காவடி மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்த 1008 பால்குடங்கள் மூலவர் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் துணை இணை ஆணையர் ரமணி கோயில் அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Similar News