வெங்கல் அருகே சுடுகாட்டு இடத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்
வெங்கல் அருகே சுடுகாட்டு இடத்தை ஆக்கிரமித்ததாகக்கூறி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாம்பளள்ம் ஊராட்சிக்கு உட்பட்ட காதர்வேடு கிராமத்தில், கொசஸ்தலை ஆற்றின் அருகே பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சுடுகாட்டின் சுமார் 2.70 ஏக்கர் நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தில் தனிநபர் உழுது விவசாயம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
இதனை கண்டித்து கிராம மக்கள் அங்கு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுடுகாட்டிற்கு சொந்தமான நிலத்தை அக்கிரமித்துள்ளதால் உயிரிழந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், புதைப்பதற்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் கல்பனா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் மற்றும் காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.