எல்லாபுரம் அருகே புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டித்தர மக்கள் கோரிக்கை

எல்லாபுரம் அருகே புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டித்தர பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Update: 2022-11-26 06:53 GMT
எல்லாபரம் அருகே ஆபத்தான நிலையில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடம்.

எல்லாபுரம் அருகே ஆபத்தான ஊராட்சி மன்ற கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய காங்கிரீட் கட்டிடத்தை கட்டி தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயலச்சேரி ஊராட்சியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்களின் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு பள்ளி அருகே சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம் உள்ளது. இப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும், வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த இந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்,

இந்த நிலையில் இந்த ஊராட்சி மன்ற கட்டிடமானது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் தற்போது கட்டிடத்தின் உள் மேற்கூரை மிகவும் பழுதடைந்து மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கீழே கொட்டுவதுடன் அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி ஆபத்து விளைவிக்கும் வகையில் காட்சி அளிக்கிறது.

மேலும் அருகே அரசு பள்ளி உள்ளதால் ஓய்வு நேரங்களில் மாணவர்கள் வெளியே வந்து  விளையாடிக்கொண்டிருப்பார்கள். எனவே இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடத்தை கட்டி தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி வருகிறார்கள்.

இந்த ஊராட்சி மன்ற கட்டிடம் இதே நிலையில் தொடர்ந்தால் என்றாவது ஒரு நாள் இடிந்து விழுந்து அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கோ அல்லது வரி கட்டுவதற்காக வரும் மக்களுக்கோ அல்லது விளையாட வரும் மாணவர்களுக்கோ உயிர்ப்பலி சேதத்தை ஏற்படுத்தி விடும் என்பதில் ஐயமில்லை. ஆதலால்  பெரிய அளவிலான  ஆபத்து விளைவிக்கும் முன்பே இந்த பழுதடைந்த ஊராட்சி மன்ற கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags:    

Similar News