குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கத்தில் புதிதாக கட்டி வரும் பேருந்து நிலையத்தை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-07-13 11:30 GMT

குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்யும் அமைச்சர் சேகர்பாபு 

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கம் பகுதியில் அமைய உள்ள பிரம்மாண்ட பேருந்து நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழு தலைவரும், இந்து சமய அறநிலை துறையின் அமைச்சருமான சேகர்பாபு, பூந்தமல்லி எம்எல்ஏ  கிருஷ்ணசாமி மற்றும் துறை செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு தெரிவிக்கையில், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து முனையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் தொகுதி குத்தம்பாக்கம் ஊராட்சியில் சுமார் 25. ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.427 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இப்பேருந்து நிலையத்திலிருந்து சேலம், தர்மபுரி, ஓசூர்,பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் செல்லக்கூடிய வகையில் பணிகள் முழு வீச்சியில் நடைபெற்று வருகிறது.

சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஒரு தீர்வாக அமையும். இந்தப் பேருந்து நிலையத்தில் 41 கடைகள் அமைய உள்ளது. சொகுசு ஆம்னி பேருந்துகளுக்கு 8 டிக்கெட் கவுண்டர்கள்,234 நான்கு சக்கர வாகனம், 1811 இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமும், மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி ஓய்வு கூடம், திருநங்கைகளுக்கு தனி கழிப்பிடமும், குழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை அமைய உள்ளது

மேலும்  பேருந்து நிலையத்தின் வேலைகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த பேருந்து திறப்பு விழா செய்ய வாய்ப்புள்ளது. இந்த பேருந்து நிலையம் முழுவதுமாக குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையமாக திறக்கப்பட உள்ளது என்று கூறினார்

மேலும் அவர் கூறுகையில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 6 திருக்கோயில்கள் இந்த ஆண்டு மட்டும் திருப்பணிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியை எதிர்க்கின்ற அனைத்து கட்சிகளுக்கும் எந்தவித பொருளும், ஆயுதமும் கையில் கிடைக்கவில்லை. அதனால் கையில் கிடைப்பதையெல்லாம் இந்த ஆட்சியாளர்கள் மீது தூக்கி எறிய நினைக்கின்றனர்.

எடப்பாடி ஆட்சியில் பாலும், தேனும் ஆறாக ஓடவில்லை. கொடநாடு எஸ்டேட்டில் இருந்த காவலரை கூட காப்பாற்ற முடியாத துப்பு கெட்ட ஆட்சியை செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி. சட்டம் ஒழுங்கு பற்றி பேச அவருக்கு எந்த அருகதையும் கிடையாது.

காய்த்த மரத்தில் தான் கல்லடி படும் என்பது போல தொடர்ந்து வாய்க் கொழுப்பெடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருகிறார். அவரது உயரம் அவருக்கு தெரியவில்லை. அவர் கண்ணாடிரூமில் இருந்து கல்லெறிந்து கொண்டிருக்கிறார். திராவிட முன்னேற்றம் ஒரு கற்கோட்டை. திரும்ப தாக்க முயன்றால் அவர் தாங்க மாட்டார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் பாடிய சீமான் மீது பல்வேறு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. சட்டப்படி சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு சீமான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதே போன்ற வார்த்தைகளை கூறி ஏற்கனவே மன்னிப்பு கோரி உள்ளார். அதே வார்த்தையை தற்பொழுது பயன்படுத்தி உள்ளது அரசியல் பார்வை அவர் மீது திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான்.

என்னதான் விழுந்து, விழுந்து புரண்டாலும் முட்டி போட்டுக் கொண்டு தவழ்ந்தாலும் திராவிட ஆட்சி நிலை குலைய செய்ய முடியாது. சீமானின் வாய் கொழுப்பிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, நகர் மன்ற துணைத்தலைவர் சிங்குராஜா மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News