3 சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பூந்தமல்லியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை இன்று இரவுக்குள் காவல்துறை கண்டறியாவிட்டால் நாளை முதல் தொடர் போராட்டம் நடைப்பெறும் என ஒருங்கிணைந்த பூந்தமல்லி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் அமலாகி உள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறித்தி திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் ஒருங்கிணைந்த வழக்கறிஞர்கள் சார்பாக பூந்தமல்லியில் அமைந்துள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு 100.க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் இருந்து தபால்நிலையம் வரை மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பியவாறு வழக்கறிஞர்கள் சென்றனர்.
வழக்கறிஞர் ஏகாம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பூவிருந்தவல்லி ஒருங்கிணைந்த வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஏகாம்பரம்,தற்போது அமலாகியுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை இன்று இரவுக்குள் காவல்துறை கண்டறியாவிட்டால் நாளை முதல் தொடர் போராட்டம் நடைபெறும் தெரிவித்தார். வழக்கறிஞர்கள் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.