கொடிக்கம்பத்தை அகற்ற சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!
பொன்னேரி அருகே கோவில் திருவிழாவுக்காக நடப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றியபோது இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
பொன்னேரி அருகே கோவில் திருவிழாவிற்காக நடப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்ற சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 25). முதுகலை பட்டதாரியான மோகன் திருமண விழா நாட்களில் பந்தல், சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வரும் அவரது உறவினரின் கடையில் பணியாற்றி வந்தார்.
நேற்று மூலதாங்கல் கிராமத்தில் உள்ள துலுக்கானத்தம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழாவிற்காக வண்ண அலங்கார விளக்குகளும், வண்ணக் கொடி கம்பங்களும் நடப்பட்டிருந்தன.தீமிதி திருவிழா முடிவடைந்ததை தொடர்ந்து காலை அலங்கார விளக்குகளையும், கொடிக்கம்பத்தையும் அகற்றும் பணியில் மோகன் ஈடுபட்டிருந்தார்.
இரும்பு கொடி கம்பத்தை அகற்றும் பொழுது மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்ததில் மோகன் தூக்கி வீசப்பட்டு மயங்கினார்.இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மயங்கிய நிலையில் இருந்த மோகனை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உடற்கூறு ஆய்வுக்காக சடலம் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவில் திருவிழாவிற்காக நடப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.