காயங்களுடன் சுற்றித் திரிந்த புள்ளிமானை ஊர்மக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் காயத்துடன் வந்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டு பாதுகாப்பாக வனத்தில் விட்டனர்.;
பொன்னேரியில் அரசு பள்ளியில் காயங்களுடன் சுற்றித் திரிந்த புள்ளிமானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், இளைஞர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர் அப்போது அங்கு, புள்ளிமான் ஒன்று தலையில் லேசான காயங்களுடன் சுற்றித் திரிவதை கண்டனர். இதனையடுத்து உடனடியாக அதனை விரட்டிச் சென்று பள்ளியின் வகுப்பறையில் வைத்துப் பூட்டினர்.
தொடர்ந்து இதுகுறித்து கும்மிடிப்பூண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், வகுப்பறையைத் திறந்து புள்ளிமானை மீட்டு பார்வையிட்டனர். புதரில் சிக்கி புள்ளிமான் தலையில் காயம் அடைந்திருப்பதும் தெரிய வந்தது. உடனடியாக அதனை பொன்னேரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
பின், மீட்கப்பட்ட புள்ளிமான் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெரியபுலியூர் உள்ள காப்புகாட்டில் பாதுகாப்பாக கொண்டு சென்று விடப்பட்டது.