கடல் போல் சூழ்ந்துள்ள கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம்
பொன்னேரி அருகே குடியிருப்பு பகுதியில் சூழ்ந்திருக்கும் கழிவு நீரை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்
பொன்னேரி அருகே கடல் போல் சூழ்ந்துள்ள கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் வேதனை தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய கொங்கி அம்மன் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய 18 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள், உணவகங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரானது, கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டு அங்கிருந்து மழை நீர் வடிகால் வழியாக வெளியேறி நந்தியம்பாக்கம் பகுதிக்கு வந்து அடைகிறது.
அண்மையில் பெய்த மழையின் போது கழிவுநீரானது மழை நீருடன் கலந்து வெளியேறி கொங்கி அம்மன் நகர் முழுவதும் பரவி கடல் நீர் சூழ்ந்தது குட்டி தீவை போன்று காட்சியளிக்கிறது, மேலும் அருகில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பல் கழிவுகள் காற்று மூலம் பரவி அப்பகுதி முழுவதும் தேங்கியுள்ள கழிவுநீருடன் கலந்து நிலப்பரப்பு முழுவதும் சாம்பல் நிறமாக மாறிவிட்டது.
இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, தேங்கியுள்ள கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல், மலேரியா, சிக்கன் குனியா உள்ளிட்ட நோய்க்கிருமிகள் பரவக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி வாசிகள் கொரோனா அச்சுறுத்தல் விலகிய பின்னரும் சுகாதார சீர்கேட்டில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள 24 மணி நேரமும் முக கவசம் அணிந்தபடியே அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற கோரி, வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் மனு அளித்தும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாததால், இதுகுறித்து தமிழக முதல்வரின் தனி பிரிவிலும் மனு அளித்துள்ளனர். ஆனால், ஒரு மாதம் கடந்த பின்னரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுப்பது அல்லது வீடுகளை காலி செய்துவிட்டு மாற்று இடம் தேடி சொல்வது போன்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர்.