வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் : திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாக உள்ளதால், திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடைவிதிக்கப்பட்டுளளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி பின்னர் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என பொன்னேரி மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன் அறிவுறுத்தியுள்ளார்.
நாளை முதல் 11-ஆம் தேதி வரை காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும், அப்போது மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மீனவர்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் இன்று மாலை 6 மணிக்குள் கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீனவர்களின் படகுகள், மீன்பிடி கலன்கள், வலைகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் பாதுகாப்பாக வைக்கவும் மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.