பொன்னேரி அருகே சாலை அமைக்கும் பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல்
எண்ணூர் துறைமுகம் அருகே சாலை அமைக்கும் பணிகள் காரணமாக அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புதுநகர், காட்டுப்பள்ளி ஆகிய ஊர்களில் எண்ணூர் காமராஜர் துறைமுகம், அதானி துறைமுகம், வடசென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், எண்ணெய் நிறுவனங்கள், எரிவாயு நிறுவனங்கள் என பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
எண்ணூர் துறைமுகத்திலிருந்து வல்லூர் வரையில் தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலையை அடைந்த பின்னர் பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக கனரக வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.
வல்லூரில் இருந்து எண்ணூர் காமராஜர் துறைமுகம் செல்லும் வழியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளில் இருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு வெளியே செல்லும் கனரக வாகனங்களும், சரக்குகளை ஏற்றுவதற்காக தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் என எப்போதும் போக்குவரத்து நிறைந்து இருக்கக்கூடிய இந்த சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குகிறது.
இன்று வல்லூர் சந்திப்பில் இருந்து மீஞ்சூர் பிடிஓ அலுவலகம் வரையிலும், மறுபுறத்தில் வல்லூர் சந்திப்பில் இருந்து கொண்டக்கரை வரை என சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் பேருந்துகளில் பயணித்த பொதுமக்கள் அவதியடைந்தனர்.
24 மணி நேரமும் போக்குவரத்து இருக்கும் இந்த பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவல்துறையினர்ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்