திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

காய்ச்சலுக்கு 8.மாத ஆண் குழந்தை பலி, தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி, மெக்கானிக் கடையில் திடீர் தீ

Update: 2023-03-12 07:45 GMT

மெக்கானிக் கடையில் தீவிபத்து

இருசக்கர வாகன மெக்கானிக் கடையில் தீ விபத்து

பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியில் கந்தன் என்பவர் இருசக்கர மெக்கானிக் கடை  நடத்தி வருகிறார். காலை கந்தனும் அவரது கடையில் பணியாற்றும் ஹரி இருவரும் இரு சக்கர வாகனத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் தீப்பற்றி மளமளவென பெட்ரோல், ஆயில் உள்ளிட்டவை கொழுந்து விட்டு வெடித்து சிதறி கரும்புகையுடன் தீ எரிந்தது. இதனால் கடையில் இருந்து கந்தன் மற்றும் ஹரி இருவரும் அலறியடுத்தபடி வெளியே ஓடி வந்தனர்.

இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி தீயணைப்பு வீரர்கள்  கொழுந்து விட்டு பற்றி எரிந்த தீயை தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மெக்கானிக் கடைக்கு அருகில் இருந்த பேன்சி ஸ்டோர், டீக்கடைகளிலும் தீ லேசாக பரவியதால் அந்தக் கடைகளின் ஷட்டரையும் உடைத்து தீயை அணைக்கும் பணியில் தீ தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 1மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் மெக்கானிக் கடையில் இருந்த இருசக்கர வாகனங்கள், அருகில் இருந்த கடைகளில் இருந்த பொருட்கள் என சுமார் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது. தீ விபத்து குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி

ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் போக்குவரத்து உட்கோட்டம் சார்பில் இருசக்கரம் வாகனம் ஓட்டுநர்களுக்கு தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி செங்குன்றம் உட்கோட்ட போக்குவரத்து உதவி ஆணையாளர் மலைச்சாமி தலைமையில் நடைபெற்றது.

செங்குன்றம் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். இந்த பேரணிக்கு சிறப்பு அழைப்பாளராக ஆவடி போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் ஜெயலட்சுமி கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் இருசக்கர வாகனம் ஓட்டுநர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, அதிவேகம் தவிர்த்தல், போக்குவரத்து விதிகளை மதித்தல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது, இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் பயணிக்ககூடாது என்று இருசக்கர வாகனம் ஓட்டுநர்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட செங்குன்றம், அம்பத்தூர், எண்ணூர், மணலி ஆகிய போக்குவரத்து காவலர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து செங்குன்றம் கூட்டுச்சாலையிலிருந்து சென்னை பாடி வரை தலைக்கவசம் அணிவோம் தலைமுறை காப்போம் என்ற விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டுநர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் உமாபதி உள்ளிட்ட போக்குவரத்து காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

காய்ச்சலுக்கு 8.மாத ஆண் குழந்தை பலி

பொன்னேரி, பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது 8 மாத ஆண் குழந்தை லிக்கித் சாய். சம்பவத்தன்று குழந்தைக்கு காய்ச்சல் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெற்றோர்கள் குழந்தையை பழவேற்காடு அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில், குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாகவே மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து திருப்பாலைவனம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறு ஆய்வறிக்கை வந்த பின்பே எந்த வகையான காய்ச்சல் என தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News