இந்திய அளவிலும் தமிழக அளவிலும் 3 வது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை: பாலகிருஷ்ணன்
கடற்கரையில் சர்ச்சை நீடித்து வரும் நிலையில் கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணிகளை தொடர கூடாது.
இந்திய அளவிலும், தமிழக அளவிலும் 3வது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை. பாஜவை வீழ்த்தும் மாற்று அணிக்கு மட்டுமே இடம். கடற்கரையில் சர்ச்சை நீடித்து வரும் நிலையில் கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணிகளை தொடர கூடாது. பிரபாகரன் உயிருடன் திரும்பி வந்தாலும் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விட போகிறது என்றார் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது.கட்சியின் நடவடிக்கைகள், வரவு செலவு கணக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பொதுமக்கள் வரிப்பணத்தில் 3000கோடி ரூபாய் மதிப்பீட்டில் பட்டேல் சிலை போன்ற மிகப்பெரிய அளவிலான நினைவிடங்கள் தேவையில்லை என்பது தான் தங்களது நிலைப்பாடு . தலைவர்களுக்கு நினைவு சின்னமே தேவையில்லை என்பதல்ல கலைஞருக்கு கடற்கரையில் நினைவு சின்னம் வைக்கக்கூடாது என்பதல்ல மிகப்பெரிய ஆளுமையான கலைஞருக்கு நினைவு சின்னம் அமைக்கலாம் எனவும், பொதுவான இடத்தில் வைக்கலாம்.
கடற்கரையில் நினைவு சின்னம் அமைக்க சர்ச்சை நீடித்து வரும் நிலையில் அரசு அந்த பணிகளை தொடர கூடாது , சர்ச்சை உள்ள இடத்தில் வைக்காமல் அனைவரும் ஏற்று கொள்ளும் இடத்தில் கலைஞருக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும். பாஜகவை கண்டு அனைத்தும் கட்சிகளும் பயப்படுவதில்லை. அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை சித்திரவதை செய்வதை தான் சுட்டிக்காட்டுவதாக தெரிவித்தார்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பது ஏற்கெனவே தெளிவுபடுத்தப்பட்ட விஷயம். பழ நெடுமாறன் கூறிய கருத்திற்கு எந்த அடிப்படையும் இருப்பதாகத் தெரியவில்லை. பிரபாகரன் மீண்டும் வந்தால் தற்போது என்ன மாற்றம் ஏற்பட்டு விடப்போகிறது என்பதை மூத்த தலைவர்கள் யோசிக்க வேண்டும்.
தற்போதுள்ள இலங்கையில் புதிய அரசாங்கம் பிரச்னைகளை தீர்க்க முயற்சி வரும் நிலையில், இந்த செய்தி தற்போது தமிழ் மக்கள் மீதான தாக்குதலை நடத்திடவே வழி வகுக்கும். இந்திய அளவிலும், தமிழக அளவிலும் 3வது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை. வாக்குகள் சிதறாமல் பாஜகவை வீழ்த்தக்கூடிய மாற்று அணி மட்டுமே ஒரே அணி என்றார். தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நீடித்து வருவதாகவும், அந்த அணி பாஜக, அதிமுகவை வீழ்த்தும் பணிகளை மேற்கொள்ளும் என்றார் கே.. பாலகிருஷ்ணன்.