விவசாயிகள் இயந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டம்

பொன்னேரி அருகே ஏரியில் மண் அல்ல எதிர்ப்பு தெரிவித்து விவசாயி கள் போராட்டம் செய்ததால் பரபரப்பு.

Update: 2023-08-22 01:00 GMT

பைல் படம்

பொன்னேரி அருகே மண் அள்ளும் இயந்திரத்தை சிறை பிடித்து விவசாயிகள் போராட்டம். ஏரியில் குவாரி செயல்பட அனுமதித்தால் நிலத்தடி நீர் சரிந்து குடிநீர், விவசாயம் கேள்விக்குறியாகும் என புகார் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தில் 100.க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். கோளூர் ஏரியை நம்பி சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

அண்மையில் மாவட்ட நிர்வாகம் கோளூர் ஏரியில் சவுடு மண் குவாரிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் குவாரி செயல்படுவதற்கான முன் ஏற்பாடுகள் செய்ய முற்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து விவசாயிகள், கிராம மக்கள் ஏரிக்கு சென்று மண் அள்ளும் இயந்திரத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாசன வசதி பெறக்கூடிய ஏரியை மண் குவாரிக்கு அனுமதித்தால் விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் அபாயம் இருப்பதாகவும், ஏற்கெனவே தங்களது கிராமத்தில் குடிநீர் சரியில்லாமல் 5கிமீ தூரத்தில் இருந்து விநியோகம் செய்யப்படுவதாகவும், தற்போது குவாரியால் விவசாயம் கேள்விக்குறியாகும் அபாயம் இருப்பதாக குற்றம் சாட்டினர்.

மேலும் ஏரியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும் அதனை வருவாய்த்துறையினர் மீட்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர். இதனிடையே ஒரு தரப்பினர் குவாரி நடத்தி ஏரியை தூர்வாரி மழைக்காலத்தில் மழைநீர் சேகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

தொடர்ந்து மண் அள்ளும் இயந்திரத்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயி களிடம் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மண் அள்ளும் இயந்திரத்தை சிறை பிடித்து போராட்டம் நடத்துவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




Tags:    

Similar News