ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தமிழக அரசு அனுமதிக்க கூடாது - மா. கம்யூ., வலியுறுத்தல்
RSS News Today -பொன்னேரியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது என, தமிழக அரசை மா.கம்யூ., வலியுறுத்தியது.
RSS News Today -தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது. பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் பாஜகவின் பிரதிநிதியாக செயல்படுகின்றனர் என, பொன்னேரியில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை தமிழகத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும், சமூக நல்லிணக்க மனித சங்கிலி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மதிமுக, ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட 24 கட்சியினர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:
பாசிச தன்மை கொண்ட அமைப்பான ஆர்எஸ்எஸ், தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற துடிக்கிறது. அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது. பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள், பாஜகவின் பிரதிநிதியாக செயல்படுகின்றனர். பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை மக்களிடம் கொண்டு செல்லும் பணிகளை ஆளுநர்கள் மேற்கொண்டு வருகின்றனர். திருக்குறளை குறித்து பேசும் தமிழக ஆளுநர் ரவிக்கு, திருக்குறளை பற்றி என்ன தெரியும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது போல், பிறப்பால் அனைவரும் சமம் என்பதை திருக்குறள் வலியுறுத்துகிறது. எய்ம்ஸ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில், இந்தி பிரதான மொழி எனக்கூறி இந்தியை திணிக்க முற்படுகிறது, ஆளுநர்கள் அரசியலில் தலையிட கூடாது, என்றார்.
பெரியபாளையத்தில் மனிதசங்கிலி போராட்டம்
பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஒன்றிய மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு இயக்கம் சார்பில், சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை,மத நல்லிணக்கம்,சமூக அமைதி, மாநில வளர்ச்சி ஆகியவற்றை வலியுறுத்தி மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு இயக்கத்தின் சார்பில், ஒன்பது கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று 31 அமைப்புகளில் ஆதரவுடன் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம், தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது இதில் ஒரு பகுதியாக, எல்லாபுரம் ஒன்றிய மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு இயக்கத்தின் சார்பில் பெரியபாளையம் பஸ் ஸ்டாப் அருகே சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,காங்கிரஸ் கட்சி, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, முஸ்லிம் லீக்,மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் நடைபெற்ற இப்போராட்டத்தால், சென்னை-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2