புஷ்பரதேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா

சோழவரம் அருகே சூரிய பரிகார ஸ்தலமாக விளங்கும் ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Update: 2024-07-12 07:30 GMT

சூரிய பரிகார ஸ்தலமாக விளங்கும் ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்  

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம். ஞாயிறு கிராமத்தில் அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத புஷ்பரதேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பஞ்ச பாஸ்கர ஸ்தலங்களில் ஒன்றாகவும், சூரிய பரிகார ஸ்தலமாகவும் இந்த ஆலயம் விளங்கி வருகிறது.

இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த மூன்று நாட்களாக சிவாச்சாரியார்கள் யாகசாலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி வந்தனர்.

இதனை அடுத்து இன்று புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் ஆலய கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு சிறப்பாக நடத்தினர்.


அப்போது பக்தர்கள் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என பக்தி பரவசத்துடன் முழங்கி சிவபெருமானை வணங்கினர். இதனை எடுத்து அங்கும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து மூலவருக்கு பல்வேறு நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிவ பக்தர்கள் கைலாய வாத்தியங்களை வாசித்து சிவனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.

இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். ஆலயத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News