அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி முற்றுகைப் போராட்டம்
சோழவரம் அருகே நெற்குன்றம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தர ஊராட்சி மன்றம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், நெற்குன்றம் ஊராட்சியில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கம்யூனிஸ்ட், பாஜக, அதிமுக சார்பில் கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் அரசு பள்ளியின் கட்டிடம் பழுதடைந்த இடித்து இரண்டு வருடங்கள் ஆகியும் தற்போது வரை புதிய பள்ளி கட்டிடம் அந்த இடத்தில் கட்டித் தரவில்லை. போதிய கட்டிடம் வசதி இல்லாத காரணத்தினால் மாணவர்கள் அவதிப்பட்டு வருவதாகவும் கூறினர்.
மேலும் சாலை வசதி, தரமான மின்விளக்கு மற்றும் பருவமழை காலங்களில் ஏரியிலிருந்து கரை அரிப்பு ஏற்பட்டு நெற்குன்றம் - செக்கஞ்சேரி அருகே உள்ள குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களும் பாதிப்படைவதாகவும், அதனை உடனடியாக ஏரியின் கரையை பலப்படுத்தி நிரந்தர தடுப்பு சுவர் அமைத்திட வேண்டியும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் , ஊராட்சியில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளுக்கு சமுதாய நலகூடம், அரசு வழங்கும் ரேஷன் பொருட்களை வாங்க நியாயவிலை கடை கட்டிடம்,மயான பாதை வசதி போன்ற இந்த கிராம பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திட வேண்டி கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசியல் களத்தில் எதிரும்-புதிருமாக உள்ள கம்யூனிஸ்ட், பாஜக மற்றும் அதிமுக கட்சினர்கள் இந்த நெற்குன்றம் கிராம மக்கள் பிரச்சனைக்காக ஒன்றிணைந்து களத்தில் இறங்கி போராடியது சோழவரம் சுற்றுவட்டார அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.