நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகார போராட்டம் : கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் சமரச பேச்சு..!
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற போராடவந்த கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களிடம் வட்டாட்சியர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.
பொன்னேரி அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட வந்த கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் வட்டாட்சியர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் உள்ள ஓடை கால்வாய் மீட்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. சிறுவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட இலவம்பேட்டில் தனியார் நிறுவனம் ஒன்று விதிகளுக்கு மாறாக நிலப் பரிவர்த்தனை செய்துள்ளதாகவும், நீர்வழிப் பாதையை மாற்றி அமைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் மழைக்காலங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிடப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்களை பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் அழைத்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இலவம்பேட்டில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஓடைக்கால்வாய் ஆக்கிரமிப்பு தொடர்பாகவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.