ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா.
பொன்னேரி ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் ஆலயத்தின் சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பொன்னேரி திருவாயர்பாடியில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் ஆலயத்தின் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 4.ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தினந்தோறும் கரிகிருஷ்ண பெருமாள் சிம்ம, அனுமந்த, புன்ன, அன்ன, வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கரிகிருஷ்ண பெருமாளும் அகதீஸ்வரரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் ஹரி ஹரன் சந்திப்பு திருவிழா நேற்று அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான அலங்கரிக்கபட்ட 40 அடி உயரம் 60 டன் எடை கொண்ட திருத்தேரில் ஸ்ரீகரிகிருஷ்ணபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன்னதாக எம்பெருமானுக்கும் தாயாருக்கும் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேரடிக்கு வந்தடைந்தனர்.
திமுக எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பக்தர்கள் அனைவரும் கோவிந்தா கோவிந்தா என பகவானின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரடியிலிருந்து புறப்பட்ட திருத்தேர் புதிய தேரடி தெரு, பேருந்து நிலையம், தாயுமான் தெரு, உள்ளிட்ட முக்கிய மாட வீதிகள் வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக நிறுத்தப்பட்டு மீண்டும் மாலையில் தேர் நிலையை சென்றடையும்.
பிரம்மோற்சவ தேர் திருவிழவையொட்டி பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.