மரக்கட்டைகரி தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மரக்கட்டைகளை எரித்து கரி தயாரிப்பதால் மூச்சு திணறல் மாசு ஏற்படுவதால் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

Update: 2023-09-23 09:00 GMT

கரி தயாரிக்க குவித்து வைக்கப்பட்டுள்ள மரக்கட்டைகள் 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 12.வது வார்டு பச்சையம்மன் நகர் பகுதியில் சுமார் 2000. க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிக்கு உட்பட்ட பாண்டியன் தெருவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெறாமல் குடியிருப்பு பகுதி அருகிலேயே மரக்கட்டைகளை கொளுத்தி கரியாக்கி வியாபாரம் செய்யும் பணியினை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.

தினசரி கட்டைகளை கொண்டு கரிகளை எரிக்கும் போது ஏற்படும் புகையால் அப்பகுதி மக்கள் மூச்சு திணறல், மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இதனை கேட்கும் போது அவர்களை மிரட்டும் விதத்தில் அவர்கள் நடந்து கொள்வதாகவும், அவ்வழியே நடந்து  செல்பவர்கள், நடைப்பயிற்சி செல்பவர்களை அந்த தெருவில் வரக்கூடாது எனவும் வருபவர்களை கடுமையாக சாடுவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

மரக்கரி தயாரிக்க முறையாக பேரூராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் மாசு ஏற்படுத்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக மழை நீர் தேங்கியுள்ளது.  அங்குள்ள கால்வாயில் கொளுத்தப்படும் கரி துகள்களும் கரி கட்டைகளும் கால்வாயில் அடைப்பை ஏற்படுத்தி கழிவு நீரை வெளியேற்றாத வண்ணம் தடுத்து நிறுத்தி உள்ளது

இதனால் அதில் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தியும் அதிகமாகி கடிப்பதால் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோயை ஏற்படுத்தும் அபாயம் உருவாகி உள்ளது.

எனவே இத்தகை செயலில் ஈடுபடும் இந்த நபர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News