பொன்னேரி சிவன் கோயிலில் நவராத்திரி விழா
பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் நான்காம் நாள் நவராத்திரி விழா வழிபாடு விமரிசையாக நடைபெற்றது
பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி நான்காம் நாள் விழா.அம்பாள் சிவபெருமானுக்கு பூஜைசெய்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் நவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு முதல் நாளில் ஆனந்தவல்லி தாயார் பராசக்தி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்தார்.
இரண்டாம் நாளில் மதுரை மீனாட்சி அவதாரத்தில் திவ்யமாக எழுந்தருளினார்.மூன்றாம் நாளில் கண்மூடுதல் நிகழ்வு நடந்தேறியது.விழாவின் நான்காம் நாளான நேற்று மாலை பார்வதி தாயார் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு முன்னதாக உற்சவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், குங்குமம் உள்ளிட்ட சிறப்பு வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க சிவாச்சார்யார்கள் வேதமந்திரம் ஓதி சிவனுக்கும் அம்பாளுக்கும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதையடுத்து சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் புஷ்பரத ஆரத்தியும், மஹா தீபாராதனையும் காட்டப் பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் அருளை பெற்று சென்றனர்.