பொன்னேரியில் நாக சதுர்த்தி விழா
பொன்னேரியில் உள்ள தேவன் தேவத்தமன் கோவிலில் நாக சதுர்த்தி விழா முன்னிட்டு பக்தர்கள் புற்றில் பாலை ஊற்றி வழிபாடு
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் சுமார் இருநூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு தேவத்தம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் நாக சதுர்த்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நாகசதுர்த்தி விழாவை முன்னிட்டு பொன்னேரியில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை பெண்கள் மற்றும் ஆண்கள் குழந்தைகள் என பலரும் புனித நீராடி மஞ்சள் ஆடைகளை அணிந்து கோவிலுக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள புற்றுக்கு மஞ்சள்பூசி, குங்குமமிட்டு, பால், முட்டை ஊற்றி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
இதனை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீப, தூப, ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து உற்சவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் கம்பீரமாக ஊஞ்சலில் வீற்றிருக்க சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மஹாதீபாராதனை காட்டப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோவில் பூசாரி காஞ்சனாம்மாள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேவத்தம்மனை வழிபட்டு சென்றனர்.