மின்னல் தாக்கி பெண் மரணம்: காயமடைந்து சிகிச்சை பெறபவர்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்
பெரியபாளையம் அருகேமின்னல் தாக்கி வயலில் நின்ற பெண் மரணமடைந்தார். காயமடைந்த 8 பேருக்கு எம் எல்ஏ கோவிந்தராஜன் உதவி
பெரியபாளையம் அருகே விவசாய பணியின் போது மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டவர்களை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் ஒன்றியம், அமிதா நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவரது மனைவி செல்லம்மாள்(55). இவர் சிறுவாபுரி ஊராட்சிக்கு உட்பட்ட பேட்டை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பலத்த சப்தத்துடன் மின்னல் தாக்கியதில் செல்லம்மாள் (55)சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
இவருடன் வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த சகிலா, தனலா,வனஜா, நாகேஸ்வரி, பொம்மி, சம்பூர்ணம், கஸ்தூரி உள்ளிட்ட 8.பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு பொன்னேரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் அறிந்த கவரப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த செல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கவரப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த எட்டு பேரை நலம் விசாரித்து ஆறுதல் கூறினார் மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர்களின் மருத்துவ செலவுக்காக அவரது சொந்த நிதியிலிருந்து தல 5000. ரூபாயும், உயிரிழந்த செல்லம்மாள் குடும்பத்திற்கு ஈமச்சடங்கிற்காக ரூபாய்10,000 வழங்கி ஆறுதல் கூறினார். அவருடன் பொன்னேரி நகர செயலாளர் ரவிக்குமார், நகர மன்ற தலைவர் பரிமள விஸ்வநாதன், வழக்கறிஞர் தேவேந்திரன், நகர மன்ற கவுன்சிலர்கள் நல்லசிவம், யாகூப், நிர்வாகிகள் பிரதாப், பாலா, பார்த்தசாரதி, இஸ்ஜாஸ், கண்ணபிரான், காமராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.