மே தினம்: அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக சார்பில் மே தின பொதுக்கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
தொடர்ந்து நாட்டை ஆளும் திறமையான மோடியே தங்களின் பிரதம வேட்பாளர் என அதிமுகவின் துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அதிமுக சார்பில் மே தின பொதுக்கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா திருவள்ளூர் அதிமுக வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி கலந்து கொண்டு பேசியதாவது: பல ஆண்டுகளாக அடிமைகளாய் இருந்தும் பல நூறு தொழிலாளர்கள் போராட்டத்தால் உயிரிழந்தும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சிறைச்சென்றும் போராடிப் பெற்ற 8 மணி நேர வேலையை முதல்வர் சட்டசபையில் 12 மணி நேரம் வேலையாக அறிவித்தது தொழிலாளர்களுக்கு அவர் செய்த துரோகம்.
பல கார்ப்பரேட் கம்பெனிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு இது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மாநிலத்தின் பட்ஜெட்டில் ஓராண்டில் ஆறில் ஒரு பங்கை ஸ்டாலினின் மகனும் மருமகனும் சம்பாதித்துள்ளதாக நிதியமைச்சர் கூறியிருக்கிறார். இதனை கைகட்டி வேடிக்கை பார்க்கும் இந்த அரசு எப்படி மக்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். அவர்களுக்கு தாங்கள் குடும்ப நலன் மட்டுமே முக்கியம் என்றும், முரசொலி மாறன் குடும்பத்தினரும், ஸ்டாலின் குடும்பத்தினரும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை மட்டும் சம்பாதிப்பதாக குறிக்கோளுடன் இருக்கின்றனர்.
ஸ்டாலின் குடும்பம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லை. மக்களுக்கு தேவையான எந்த திட்டத்தையும் அவர்கள் கொண்டு வரவில்லை.திமுக ஒரு கட்டுப்பாடு இல்லாத கட்சி. திமுகவில் போட்டி நிலவில் வருவதாகவும்.
பிஜேபியை தென்னிந்தியாவில் காலூன்ற வைத்ததே ஜெயலலிதா தான். அப்போது அவர் அமைத்த கூட்டணியால் வாஜ்பாய் பிரதமந்திரியாக ஆனார். ஆனால் தமிழக மக்களுக்கு எந்த உதவியும் செய்யாததால் கூட்டணியில் இருந்து வெளியேறினார். ஆனால் இதனை பயன்படுத்திய கருணாநிதி கூட்டணி அமைத்தார்.
ஆனால் தற்போது கூட்டணியில் இல்லை என்பதற்காக அவர்களை புறம் பேசி வருகின்றனர். நாட்டை ஆளும் திறமையான மோடியே எங்களின் பிரதம வேட்பாளர். தமிழக மக்களுக்கு தேவையான நிதியை தவறாமல் பெற மக்களுக்காக பிரதமரிடம் நிற்கிறோம் . ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரியை கொண்டு வந்தவர் எங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் ஸ்டாலின் முதல்வரான உடன் மூத்த நிர்வாகிகளுக்கு பதவி வழங்காமல் மகனை அமைச்சராக்கியவர் ஸ்டாலின். அவருக்கு முன்மொழிய மூத்த நிர்வாகிகளை அடிமைகளாக பயன்படுத்துகிறார்.
தமிழகத்தில் தன்னந்தனியாக வாக்கு வங்கி வைத்திருக்கும் கட்சி அதிமுக, 2-வது இடத்தில் திமுக உள்ளது. அதனாலே அவர்கள் சிறு சிறு கட்சிகளை கூட்டணியில் வைத்துக்கொண்டு வாக்கு பெறுகின்றனர்.ஆனால் தாங்கள் யார் யாரிடம் விலகி நிற்க வேண்டுமோஅங்கு விலகி நிற்போம். யாருடன் பயணிக்க வேண்டுமோ அவர்களுடம் பயணிப்போம் என்றார் கே.பி. முனுசாமி. இந்த நிகழ்ச்சியில் திமுகவில் இருந்து விலகிய பலர் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து 100 பேருக்கு தையல் இயந்திரங்கள், 100 பேருக்கு சலவைப் பெட்டிகள், வழங்கப்பட்டன. இந்த விழாவில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் பொன் ராஜா, கே.எஸ்.விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.