மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் சுவாமி கோயிலில் மண்டலாபிஷேக விழா
மீஞ்சூர் அருகே மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் சுவாமி கோயிலில் 48வது மண்டலாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.
மீஞ்சூர் அருகே மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேக வழிபாடு. திரளான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானை வழிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் ராமாரெட்டிபாளையம் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மன்னாரீஸ்வரர், பச்சையம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலை கிராம மக்களின் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 8.ஆம் தேதி அன்று மஹா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையடுத்து நாள்தோறும் காலை, மாலை என இரண்டு வேலைகளும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து நேற்று 48வது நாளான மண்டலாபிஷேக நிறைவு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் ஆகிய மூலவர்களுக்கு காலையில் பால்,தயிர், சந்தனம், ஜவ்வாது, தேன், பன்னீர், இளநீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடையில் வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து விஷேச வழிபாடு நடத்தப்பட்டது.
விழாவின் சிறப்பம்சமாக சங்காபிஷேகம் நடைபெற்றது. பூஜிக்கப்பட்ட கலசங்கள் முன்பு 108 சங்குகளை வைத்து சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடத்தினர். பின்னர் பூர்ணாஹதி செய்து மஹாதீபாராதனை காட்டப்பட்டது.
விழாவின் நிறைவாக கைலாய வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் புடைசூழ சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை சுமந்து ஆலய வலம் வந்தனர். தொடர்ந்து இரவு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அங்கு வந்திருந்த பக்தவிகளுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் மஞ்சள், குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும் விழா குழுவினரும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.