ஹரிஹரன் சந்திப்பு விழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி..!
பொன்னேரியில் ஹரிஹரன் சந்திப்பு விழாவிற்காக சவுந்தர்யவல்லி சமேத ஹரி கிருஷ்ணா பெருமாள் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொன்னேரியில் மிகவும் பிரசித்திபெற்ற ஹரிஹரன் சந்திப்பு பெருவிழாவிற்காக பந்தக்கால் நடப்பட்டது. பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட திருவாயற்பாடியில் சுமார் ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த சவுந்தர்யவல்லி சமேத ஹரிகிருஷ்ண பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஏற்பட்ட மோதல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஹரியும், ஹரனும் ஒன்றிணைந்து காட்சி தரவேண்டும் என பரத்வாஜ முனிவரும், அகத்திய மஹரிஷியும் வேண்டி கொண்டதால் பெருமாளும், சிவபெருமானும் ஒன்றாக காட்சியளித்தனர்.
ஹரியும், ஹரனும் ஒன்றே என்பதை அனைவருக்கும் உணர்த்திடவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.இவ்வளவு சிறப்புவாய்ந்த ஹரிஹரன் சந்திப்பு பெருவிழாவிற்காக பந்தக்கால் நடும் விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இதில் கோவில் வளாகத்தில் பந்தக்காலுக்கு பட்டாச்சார்யார்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் பந்தக்காலை சுமந்து வந்து ஆலயத்தின் மண்டபத்தில் நட்டனர்.இதையடுத்து பந்தக்காலுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. வருகின்ற 27ஆம் தேதி நள்ளிரவு கருடோற்சவம் எனப்படும் ஹரிஹரன் சந்திப்பு பெருவிழாவும், 29ஆம் தேதி தேர் திருவிழாவும் நடைபெறும் என விழா அமைப்பாளர்கள் தெரிவித்தனர். ஒட்டுமொத்த இந்தியாவிலேயே பொன்னேரியில் மட்டும்தான் காலங்காலமாக ஹரிஹரன் சந்திப்பு பெருவிழா நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.