பெயிண்ட் மூலப்பொருள் சேமிப்பு கிடங்கில் திடீர் தீ விபத்து..!

பொன்னேரி அருகே விச்சூரில் பெயிண்ட் மூலப்பொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்ச ரூபாய் பொருள் தீயில் எரிந்து சேதமானது.

Update: 2024-06-17 07:15 GMT

பெயிண்ட் மூலப்பொருட்கள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்டுள்ள கரும்புகை படலம்.

பொன்னேரி அருகே விச்சூரில் உள்ள பெயிண்ட் மூல பொருட்கள் சேமிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  கொழுந்து விட்டு பற்றி எரிந்த தீயை 6வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஐந்து மணி நேரத்திற்கும்  மேலாக போராடி தீயை அணைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, விச்சூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் மூலப்பொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது.இந்த கிடங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தொழிற்சாலையில் பணியாளர்கள் யாரும் இல்லை.

இந்த நிலையில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி மளமளவென பரவி தீ கொழுந்து விட்டு எரியத்  தொடங்கியது . இதுகுறித்து தகவலறிந்த மீஞ்சூர், தண்டையார்பேட்டை, எண்ணூர், மாதவரம், மணலி உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் வந்து தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக இந்த பகுதியில் வானுயர கரும்புகை எழுந்து புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரையும், ரசாயன நுரையையும் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.எளிதில் தீப்பற்ற கூடிய பெயிண்ட் மூலப்பொருட்கள் என்பதால் தீயை அணைப்பது சற்று சவாலாக இருந்தது. தொடர்ந்து மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளிலும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் காவல்துறையினர் பொதுமக்களை அவ்வழியாக யாரையும் உள்ளே செல்லாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.தீ கொழுந்து விட்டு எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்தால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

முதற்கட்டமாக இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமேதும் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ முழுமையாக அணைக்கப்பட்ட பிறகே தீ விபத்திற்கான காரணம், சேதவிவரம் குறித்து தெரிய வரும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News