மீஞ்சூரில் புழுதி பறக்கும் சாலை: பொதுமக்கள் சாலை மறியல்
மீஞ்சூரில் புழுதிப் பறக்கும் சாலையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே புழுதி பறக்கும் சாலையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வடசென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், எண்ணூர் துறைமுகம், அதானி துறைமுகம், பெட்ரோலிய நிறுவனங்கள், எரிவாயு முனையம் என பல்வேறு நிறுவனங்களுக்கு சரக்குகளை கையாளும் ஆயிரக்கணக்கான லாரிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.
கனரக வாகனங்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், சென்னைக்கு பணி நிமித்தமாக செல்வோர் என பலரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். பெய்த மழையின் காரணமாக இந்த சாலை குண்டும், குழியுமாக மாறியதால் தற்காலிகமாக சாலை குழியில் ஜல்லி கற்களை கொட்டி சீரமைக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் 16 கோடி ரூபாயில் 8 மாதங்களுக்குள் சாலை அமைத்து தரப்படும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் மழை ஓய்ந்த நிலையில் சாலையில் கொட்டப்பட்ட ஜல்லியில் இருந்து புழுதி பறக்கிறது. கனரக வாகனங்கள் சாலையில் செல்லும் போது தூசி பறப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் மீஞ்சூர் பிடிஓ அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முறையாக சாலை அமைக்காததால் தூசி பறப்பதாகவும், வீடுகளில் உள்ள உணவு, குடிநீர் என அனைத்திலும் சாலையில் இருந்து வரும் மண் விழுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர். மேலும் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் சுவாச கோளாறு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.