வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி பணம் நகைக் கொள்ளை: கொள்ளையர்கள் கைது

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி பணம் நகையை பறித்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update: 2023-01-29 05:00 GMT

கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி பெரியபாளையம் அடுத்த ஆரணி மல்லியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார். காய்கறி வியாபாரியான இவர் தினந்தோறும் ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு சென்னை கொடுங்கையூரில் சென்று விற்பனை செய்து வருகிறார்.

இவருக்கு மாலதி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 23ஆம் தேதி உதயகுமார் வழக்கம் போல காய்கறி வியாபாரத்திற்கு சென்னைக்கு சென்றுவிட்ட போது இவருடைய இரண்டு மகள்கள் பள்ளிக்கு சென்று விட்ட நிலையில், மாலதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இவர் தனியாக இருப்பதை அறிந்த முகமூடி அறிந்த மர்ம நபர் ஒருவர் மாடி பின்புறம் வழியே வீட்டுக்குள் புகுந்து மாலதியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் மற்றும் பீரோ சாவியை எடுக்குமாறு மிரட்டி உள்ளார். வீட்டில் எந்த பொருளும் இல்லை என மாலதி மறுக்கவே வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் மாலதியை அரிவாளால் வெட்டி பீரோ சாவியை எடுக்குமாறு மிரட்டி மாலதியின் கைகளை கட்டி போட்டு மாலதி கூச்சலிடாத வகையில் வாயையும் துணியால் கட்டியுள்ளார்.

சிறிது நேரத்தில் பீரோ சாவி இருக்கும் இடத்தை மாலதி கூறியவுடன் மர்ம நபர் பீரோவில் இருந்த நகை பணத்தை எடுத்துக்கொண்டு பூட்டப்பட்டிருந்த வீட்டின் கேட்டை திறந்து கொண்டு மீண்டும் வெளிப்புறம் பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். சுதாரித்த மாலதி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதனைத் தொடர்ந்து மாலதியை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்து ஆரணி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், மாலதியை வெட்டிய மர்ம நபர் வீட்டில் இருந்து சுமார் 18 சவரன் தங்க நகை மற்றும் 1.5 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் கிராமத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையை முடுக்கினர். இருசக்கர வாகனத்தில் அதே மல்லியங் குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் இருவர் வந்ததை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது ஏதும் தெரியாதவர்கள் என கூறி நழுவி சென்றனர். காயமடைந்த பெண்ணிடம் போலீசார் பெற்ற வாக்குமூலத்தில் முகமூடி அணிந்த கொள்ளையனிடம் இருந்து தப்பிக்க அவனது இடது கை கட்டை விரலில் கடித்ததாக கூறினார்.

இதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற சந்தேகற்கிடமான நபரை மீண்டும் காவல் நிலையம் கொண்டு வந்தனர். அப்போது பெண் அளித்த வாக்குமூலத்தின் பேரில் கட்டை விரலில் காயம் இருந்து உறுதியானது. இதனையடுத்து புலன் விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர். அப்போது திட்டமிட்டு பெண்ணை தாக்கி நகைகளை கொள்ளையடித்தது ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து கொள்ளையடித்த நகைகளை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பாக வைப்பதற்காக அருகில் உள்ள சின்னம்பேடு ஏரியில் துணியில் மூட்டை கட்டி தண்ணீரில் போட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஏரிக்கு சென்று காவல்துறையினர் ஆய்வு செய்ததில் கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணம் தண்ணீரில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து மல்லியங்குப்பம் கிராமத்தை சேர்ந்த அருண்குமார், மங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெய்பீ ஆகிய இருவரையும் கைது செய்து இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கொள்ளையடிக்கப்பட்ட 16.5 சவரன் நகைகள், 1.5லட்ச ரொக்கம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி தொய்வு ஏற்பட்ட போதிலும் காயமடைந்த பெண் கொள்ளையனின் கட்டை விரலை கடித்ததாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News