பொன்னேரியில் மூதாட்டியை தாக்கி மூன்று சவரன் நகை பறிப்பு
பொன்னேரியில் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி மூன்று சவரன் நகை பறிப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை.
பொன்னேரி அருகே வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி 3 சவரன் நகை பறிப்பு. படுகாயங்களுடன் மூதாட்டி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி. நாளுக்கு நாள் அரங்கேறி வரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, வேண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி கோமளா 65. இவர் தமது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இவரது வீட்டு வாசலில் ரத்த காயங்களுடன் மூதாட்டி மயங்கி கிடப்பதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் மூதாட்டியை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொன்னேரி காவல்துறையினர் மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இருவர் மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரைத் தாக்கி கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு, காதில் இருந்த கம்மலை பறிக்க முயன்றது தெரிய வந்தது.
காதில் அணிந்திருந்த கம்மல் வராததால் மூதாட்டி கூச்சலிட்டதும் மர்ம நபர்கள் செயினை மட்டும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மர்ம நபர்கள் மூதாட்டியை பலமாக தாக்கியதில் அவர் மயங்கி விழுந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி உதவி காவல் கண்காணிப்பாளர் கிரியா சக்தி சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டார். மர்ம நபர்கள் தாக்குதலில் படுகாயங்களுடன் பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மூதாட்டி கோமளா மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொன்னேரி சுற்று பகுதிகளில் பூட்டிய வீடுகளில் கொள்ளை சம்பவங்களும், கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருடப்பட்டு வந்த நிலையில் தற்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் பொன்னேரியில் அரங்கேறி வரும் கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கூறியுள்ளனர்