ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது!
ஆந்திராவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருசக்கர வாகனங்கள பறிமுதல் செய்யப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல் நிலைய போலீசார், தரணீஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வேளகாபுரம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வெங்கல், சீத்தஞ்சேரி நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஊத்துக்கோட்டையில் இருந்து போந்தவாக்கம், மாம்பாக்கம் வழியாக வேலகாபுரம் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நிறுத்துவதை போல் பாவனை காட்டிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றனர்.
அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் மது பாட்டில்கள் 51, பீர் பாட்டில்கள் 15 என 66 பாட்டில்களை கடத்திச் சென்றதை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்ததில் அவர்கள் திருநின்றவூர் அருகே உள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (22), நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த சேது (20) வெங்கல் அருகே உள்ள பேரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்த் (21) என்பது தெரியவந்தது. போலீசார் குற்றவாளிகள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.