மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்

காலை உணவு திட்டத்தில் முறையாக பணியாளர்களை நியமிக்கவில்லை என கூறி மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2023-07-13 01:30 GMT

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கடந்தாண்டு அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதற்கு முறையாக பணியாளர்களை நியமிக்கவில்லை எனவும், அது தொடர்பாக கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என அதிமுக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி ஒன்றியக்குழு தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உணவுத்திட்டத்தில் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக அறிவிப்பு பலகையில் கூட தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர். பல்வேறு பணிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசால் அறிவிப்புகள் வெளியிடப்படும் நிலையில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் முறையாக நிதி ஒதுக்கப்படுவதில்லை எனவும், இதனால் தங்களது தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிமுக உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து பகுதிகளிலும் முறையாக மழைநீர் கால்வாய்களை தூர்வாரி வெள்ளபாதிப்பு ஏற்பாடாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மேலும் பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்காமல் இருப்பதற்காக அனைத்து ஊராட்சிகளுக்கும் ஜெனெரேட்டர் வழங்கிட வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.

தொடர்ந்து உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலளித்த ஒன்றியக்குழு தலைவர் ரவி அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். உறுப்பினர்கள் விவாதம், கேள்விகள் காரணமாக ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News