புனித மகிமை மாதா திருத்தல 509 வது ஆண்டு திருவிழா
பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 509வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பொன்னேரி அடுத்த பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 509 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி பழவேற்காடு புகழ்பெற்ற புனித மகிமைமாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் முடிந்து இரண்டாம் வாரத்தில் ஆடம்பரத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஈஸ்டர் பெருவிழா முடிந்ததும் வியாழக்கிழமை அன்னையின் விழாக்கொடி ஏற்றப்படும்.
9 நாட்கள் நவநாட்கள் சிறப்பிக்கப்பட்டு 2ம் சனிக்கிழமை தேர்பவனி நடைப்பெற்று, ஞாயிறு ஆடம்பரத் திருப்பலியொடு முடிவடையும். மேலும் ஞாயிறன்று பிற்பகல் 2 மணி முதல் சாதி,மத இன வேறுபாடின்றி திருத்தலத்தை அலையென நாடிவந்து காணிக்கைகளை செலுத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
509 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலத்தில் திருவிழாவையொட்டி அன்னையின் கொடியானது மேளதாளத்துடன் பக்தர்கள் திரளாக கொடியினை சுமந்து திருவீதி உலா வந்து ஆலய கொடிமரத்தில் சென்னை மயிலை மறைமாவட்ட அருட்தந்தைகள் மார்டின் சார்லஸ், ஜோசப் ஜெயக்குமார் மற்றும் பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தல அதிபர் கபிரியேல் ஆகியோர் கொடியினை மந்திரித்து கொடியேற்றத்தை துவக்கி வைத்தனர்.
முன்னதாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட அன்னையின் கொடி பக்தர்களின் பரவசம் பொங்க மேலேறியது. அதன்பின் நற்கருணை ஆசிர்வாதமும்,சிறப்பு மறையுரையும் நடைப்பெற்றது. நடுவூர்மாதா குப்பம் கிராம மக்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இதில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.