ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பு..!
ஆந்திராவில் பரவக் காட்சிகள் காரணமாக தமிழகத்திற்கு வரும் வாகனங்களுக்கு சோதனை சாவடியில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் காரணமாக எல்லை சோதனைச் சாவடியில் தமிழ்நாட்டிற்கு வரும் வாகனங்களில் கிருமிநாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக ஆந்திராவை ஒட்டி அமைந்துள்ள தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள எளாவூர் சோதனைச் சாவடிகளில் கால்நடைத்துறையினர் சிறப்பு முகாம் அமைத்துள்ளனர்.
கால்நடைத்துறை மருத்துவர் தலைமையிலான குழுவினர் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பேருந்துகள், கனரக லாரிகள் சிறிய வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளித்து அனுப்புகின்றனர். சுழற்சி முறையில் 24மணி நேரமும் 3 ஷிப்டுகளில் சோதனைச் சாவடியில் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவைக்காய்ச்சல் முன் எச்சரிக்கை நடவடிக்கை
ஆந்திரப்பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ள நிலையில், எல்லையில் உள்ள திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. இதற்கு பறவைக்காய்ச்சல் பரவலே காரணம் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது மனிதர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆந்திர எல்லையோரத்தில் உள்ள திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களின் சுகாதாரத் துறை துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், இந்த 5 மாவட்டங்களிலும் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் பறவைக் காய்ச்சல் போன்ற பாதிப்புகளுடன் யாராவது வந்துள்ளார்களா என கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பறவைக்காய்ச்சல் பாதிப்புகளை எதிர்கொள்ள மருத்துவமனைகளில் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.றவைக் காய்ச்சல்