37 ஆம் நாள் மண்டல அபிஷேக விழா : செங்காளம்மனுக்கு வளையல் அலங்காரம்..!

இலச்சிவாக்கம் கிராமத்தில் கும்பாபிஷேகத்தை அடுத்து 37 ஆம் நாள் மண்டல அபிஷேக விழாவில் செங்காளம்மன் திருக்கோவிலில் 10,008 வளையல் அலங்காரம் நடைபெற்றது.

Update: 2024-03-22 05:00 GMT

மண்டலாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் 

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலச்சிவாக்கம் அருள்மிகு ஸ்ரீ செங்காளம்மன் திருக்கோவிலில் 10,008 வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், இலச்சிவாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ செங்காளம்மன் திருக்கோவில் உள்ளது.150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு கடந்த 2000-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில்,இக்கோவிலை கிராம மக்கள் புணர் அமைத்து 24 ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய பொலிவுடன் மீண்டும் கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி காலை மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.கடந்த பிப்ரவரி 12-ம் தேதி முதல் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.


இதில்,37-வது நாளான இன்று மண்டலபிஷேக நிகழ்ச்சியும், பங்குனி மாத செவ்வாய்க்கிழமை என்பதாலும் மூலவருக்கு பால்,தயிர்,பன்னீர்,இளநீர், ஜவ்வாது,சொர்ணம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர்.இதன் பின்னர், மாலை மூலவருக்கு பத்தாயிரத்தி எட்டு வளையல்களால் சிறப்பான முறையில் அலங்காரம் செய்யப்பட்டது.இதன் பின்னர், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பின்னர், பக்தர்களுக்கு மஞ்சள்,குங்குமம்,விபூதி,

வளையல்,தாலிக்கயிறு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள்,விழா குழுவினர்கள்,ஊர் பெரியவர்கள்,ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News