காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை முயற்சி
கும்மிடிப்பூண்டி அருகே காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி கணவன் டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னமாங்கோடு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் தர்மதுரை(33). இவரது மனைவி ரோஜா பூங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
மீனவர் தர்மதுரைக்கும் அவரது மனைவி ரோஜாவுக்கும் வெண்ணிலா (7) தினேஷ் ஐந்து என்ற இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் காதல் மனைவிக்கும் தர்மதுரைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொன்னேரி அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில் மனைவி ரோஜா ரோஜா வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது காதல் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறும், மனைவியின் அண்ணன்கள் மீது புகார் அளிக்க தர்மதுரை பலமுறை ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து காவல் நிலையம் வந்த தர்மதுரை காத்திருப்பு அறையில் வெகு நேரம் காத்திருந்ததால் ஆத்திரமடைந்த அவர் குடிபோதையில் திடீரென ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி காவல்துறையின் கண் முன்னே மின் கம்பியை வாயால் கடித்து தற்கொலைக்கு முயசெய்து கொண்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த தர்மதுரை ஆபத்தான நிலையில் ஏலாவூர் சோதனைச் சாவடி மருத்துவமனையில் முதலுதவி பெற்று பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ஆரம்பாக்கம் காவல் நிலைய போலீசாரின் மெத்தன போக்கால் தொடர்ந்து தற்கொலை முயற்சிகள் அரங்கேறி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.