பெரியபாளையத்தில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
போக்குவரத்து காவலர்கள் இல்லாத காரணத்தினால் பெரியபாளையத்தில் காலை மற்றும் மாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இதனையடுத்து பெரியபாளையம் சுற்றி உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பொதுமக்கள் பெரியபாளையம் பகுதிக்கு ஆண்கள், பெண்கள் வேலை நிமித்தமாக வந்து செல்வார்கள். மேலும் புகழ்பெற்ற பவானி அம்மன் கோவில் இங்கு அமைந்து உள்ளது. இந்த நிலையில் பெரியபாளையம் பஜார் பகுதியில் போதிய இடம் இல்லாத காரணத்தினால் குறுகிய சாலையே உள்ளது.
பெரியபாளையம் பஜார் பகுதியிலிருந்து ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், ஆரணி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இவ்வழியாக கடந்து செல்கின்றனர். மாற்று வழி இல்லாத காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. இதனால் பள்ளி நேரங்களில் அலுவலகத்திற்கு செல்லும் அதிகாரிகளும் பொதுமக்களும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல் மெய்யூர் மற்றும் அழிஞ்சிவாக்கம் பகுதியில் மணல் குவாரி இயங்கி வருவதால் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. எனவே பெரியபாளையம் பஜார் பகுதியில் போக்குவரத்து காவலர்களை 24 மணி நேரம் பணியில் இருக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.