சீரான குடிநீர் வழங்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
சீரான குடிநீர் வழங்க கோரி எல்லாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் அருகே சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் காலி குடங்களுடன் நடத்திய முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி ஊராட்சிக்குட்பட்ட தாராட்சி காலனி பகுதியில் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 2400க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறி இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடமும் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பலமுறை இங்கு வசிக்கும் மக்கள் மனுக்கள் மூலம் புகார் அளித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதனைக் கண்டித்து காலி குடங்களுடன் தாராட்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். கடந்த 2ஆண்டுகளாக கிராமத்திற்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரில் கருப்பு தூள், மரத்தூள் என மாசு படிந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால் இந்த பகுதி உள்ள மக்களுக்கு, உடல் அரிப்பு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர்.
இந்த போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ஸ்டாலின், ஊத்துக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி. சாரதி மற்றும் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் தெரிவிக்கையில் 10நாட்களில் சுகாதாரமான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.