தொழிலாளர்கள் தங்கி இருந்த அட்டை கொட்டகைகள் தீயில் எரிந்து சேதம்

கும்மிடிப்பூண்டி அருகே காரமேடு பகுதியில் தொழிலாளர்கள் தங்கி இருந்த அட்டை கொட்டகைகள் தீயில் எரிந்து சேதமடைந்தது

Update: 2023-11-02 16:15 GMT

தொழிலாளர்கள் தங்கி இருந்த அட்டை கொட்டகைகள் தீயில் எரிந்து சேதம்

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையில் தங்கி வேலை பார்த்து வந்த வட மாநில தொழிலாளர்களின் கொட்டகைகள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த காரமேடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலையில் பீகார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம்  உள்ளிட்ட வட மாநிலங்களை சார்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு தொழிற்சாலையின் பின்புறம் அடிப்படை வசதியின்றி ஒட்டி பேப்பர் அட்டைகளால் கொட்டகைகள் அமைத்து அதில் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் அனைத்து தொழிலாளர்கள் காலையில் தொழிற்சாலைக்கு பணிக்குச் சென்று விட்டனர். அப்பொழுது திடீரென கொட்டகையில் இருந்து தீப்பிடித்து  எரிய தொடங்கிய நிலையில் அருகில் இருந்த அனைத்து கொட்டகைகளும் தீப்பிடித்து  எரியத் தொடங்கியது. 

இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வட மாநில தொழிலாளர்களின் உடைமைகள் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தது.

இது குறித்து விசாரணை செய்ததில் மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதிருஷ்டவசமாக அனைத்து தொழிலாளர்கள் பணிக்கு சென்று விட்டதால் எவ்வித உயிர் சேதம் ஏற்படவில்லை என தெரிய வந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர், மற்றும் பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வட மாநில தொழிலாளர்கள் தெரிவிக்கையில், அடிப்படை வசதி ஏதுமின்றி அட்டைகளால் தங்களுக்கு கொட்டகை அமைத்து தந்ததாகவும் தாங்கள் சம்பாதித்த பணம், உடைமைகள் அனைத்தும் இந்த தீயில் எரிந்து போனதாக வேதனை  தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News